வந்துவிட்டது சாப்பாடு செலவில்லாத ரோபோ நாய்

 


சீனாவின் ஹாங்க்சோ நகரைச் சேர்ந்த யுனிட்ரீ ரோபோடிக்ஸ் என்கிற ரோபோ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு கோ-2 என்கிற செல்லப்பிராணி ரோபோ நாய். கடந்த 2021 ஆம் ஆண்டு கோ-1 என்கிற 2,700 அமெரிக்க டாலர் விலை கொண்ட முதல் ரோபோ நாய் விற்பனையில் சக்கைபோடுபோட, இதனைத்தொடர்ந்து இதன் நவீனப்படுத்தப்பட்ட ரோபோ நாய் வடிவமான கோ-2 இந்நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ரோபோ நாய்க்கு உலோகத்தாலான நான்கு கால்கள், உடல், தலை உண்டு. தலையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் இந்த ரோபோ நாய் தனது எஜமானரை படம் பிடிக்கும். வீடியோ எடுக்கும். நாய்கள் போலவே வேகமாக ஓடுவது, தாவுவது, படி ஏறி இறங்குவது, எஜமானர் மீதேறி கொஞ்சுவது ஆகிய செயல்களில் கோ-2 ஈடுபடுவது பல தரப்பினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இரவில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட சிறந்த காவலனாகவும் விளங்குகிறது கோ-2.

மேலும் கோ-2 வை வாக்கிங் அழைத்துச் செல்லும்போது, செல்லும் பாதையை டிராக் செய்து, செல்லவேண்டிய தூரம், வழியில் உள்ள தடைகள் ஆகியவற்றை தனது மேப்பிங் திறன் மூலம் கண்டறிந்து எஜமானரின் செல்போனுக்கு அனுப்பிவிடும். கோ-2 வின் இன்பில்ட் பேட்டரி மூலம் இதனை சார்ஜரில் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

நமது செல்லப்பிராணி நாய்கள் போல இவற்றுக்கு இயற்கை தேவைகள் இல்லை. குளிக்கவைக்க வேண்டியதில்லை. முடி உதிராது. நோய்கள் தாக்காது. மேலும் எஜமானரின் உத்தரவை கச்சிதமாகப் பின்பற்றும். பல ஆண்டுகள் உற்ற தோழனாக இருக்கும். குறைந்த செலவில் செல்லப்பிராணி வளர்க்க கோ-2 ஓர் சிறந்த நாய் என இந்த ரோபோ நாய் விளம்பரப்படுத்தப்படுகிறது. கோ-2, சீன ரோபோ வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என இந்நிறுவனம் நம்பிவருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments