உடுப்பிட்டி - வல்லை வீதியில் குப்பைகளை வீசியவரிடம் 5000 ரூபாய் தண்டம் அறவிட்ட கரவெட்டி பிரதேசசபை

 


உடுப்பிட்டி - வல்லை வீதியில் வல்லை நெசவாலை முன்பாக குப்பைகளை வீசிய நபரைப் பிடித்து 5000 ரூபாயினை கரவெட்டி பிரதேசசபை நேற்று அறவிட்டுள்ளது. 

நேற்றைய தினம் (26.03.2025) வல்லைப்பகுதியில் திண்மக்கழிவுகளை வீதியோரத்தில் வீசிய நபர் பிரதேசசபையால் அடையாளம் காணப்பட்டு குறித்த திண்மக்கழிவுகளை அகற்றுவதற்கு பிரதேசசபைக்கு ஏற்படுத்தப்பட்ட செலவீனம் ரூபா 5,000.00 குறித்த நபரிடமிருந்து பிரதேசசபையால் அறவிடப்பட்டது.

பிரதேச சபையின் குறித்த செயற்பாட்டுக்கு இயற்கையை நேசிக்கும் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் இனம்தெரியாத நபர்களினால் சமூக பொறுப்பற்ற முறையில் வீதிகளில் திண்மக்கழிவுகள் வீசப்படுகின்றமையால் குறித்த வீதிகள் ஊடாக பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன் இவ்வாறு வீசப்படும் திண்மக்கழிவுகளை அகற்றுவதில் பிரதேசசபையும் இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பிரதேச சபையினால் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் குப்பைகளை போடாமல் வீதிகளில் போடுபவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு திரு கணேசன் கம்சனாதன் அவர்கள் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு திண்மக் கழிவகற்றல் தொடர்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார். அதில் முதன்மையானது "கரவெட்டி திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவக் குழு" என்கிற வைபர் குழுவாகும். 

குறித்த குழுவில் பிரதேச மக்களும் துறைசார் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் உள்வாங்கப்பட்டு மக்களிடமிருந்து வரும் திண்மக்கழிவகற்றல் முறைப்பாடுகள் தொடர்பில் உடனுக்குடன் செயற்படுத்தப்பட்டு வந்தது. இதனால் கரவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட பல பகுதிகளும் தூய்மையாகின. இவையெல்லாம் கிளீன் சிறீலங்கா நிகழ்ச்சித் திட்டத்துக்கு முன்பிருந்தே திறம்பட செயற்படுத்தப்பட்டு வந்தன. 

ஆனாலும் குப்பைகளை போட வேண்டிய இடத்தில் போடாமல் செயற்படும் சில பொதுமக்களின் பொறுப்பற்ற செயல்களினால்  பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வந்தனர். 

இதனையடுத்து வீதிகளில் கழிவுகளை வீசுபவர்களுக்கெதிராக பிரதேச சபையின் செயலாளர் அவர்களின் முயற்சியினால்  சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தது. பலருக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டும் அனுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments