இலங்கை இந்தியமீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (26) ஆரம்பமாகியது.
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கலந்துரையாடலில் இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான முக்கியபிரச்சனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
குறித்த பேச்சுவார்த்தையில் அனைத்து இந்திய விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா, இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப்படகு மீனவ சங்கத்தை சேர்ந்த ஆல்வின் பெர்னாண்டோ,மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த இருதயராஜு ஜஸ்ரின்,தங்கச்சிமடம் விசைப்படகு மீனவர்சங்கத்தை சேர்ந்த ஜெருசிமான்ஸ்,பாம்பன் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ராஜப்பன் சகாயம் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இலங்கை மீனவர்பிரதிநிதிகள் சார்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ், செயலாளர் முகமட் ஆலம், ஊடகபேச்சாளர் அ.அன்னராசா, செயற்குழு உறுப்பினர்வீ, சுப்பிரமணியம், பிரதி செயலாளர் கே.றீட்டாவசந்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் - தமிழ்நாடு விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா
இழுவலைகளை பயன்படுத்தும் மீன்பிடி முறைமையை படிப்படியாக நிறுத்த முடியும் என்று இராமேஸ்வரம் மாவட்டத்தின் விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்தார்.
அத்துடன், தொப்புள்கொடி உறவான இந்திய - இலங்கை மீனவர்கள் மீன்பிடித்தொழிலை சுமூகமாக மேற்கொள்வதற்கு இரு நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்து 5 பேர் கொண்ட குழுவாக நான்கு மாவட்ட இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தினோம்.
எங்கள் தொப்புள் கொடி உறவுகளுடன் எமது நிறைகுறைகளை பேசியதில் எமக்கு மிக்க மகிழ்ச்சியே. அவர்களுடைய கஷ்ட நிலைகளை எங்களிடம் கூறினார்கள். எங்களுடைய நெருக்கடியான நிலமைகளையும் நாங்கள் கூறினோம்.
இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை இருந்தது. சுமுகமாக நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்த இலங்கை மீனவ சமாசத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக இரண்டு அரசாங்கங்களும் பேச்சுக்களை நடத்தியதன் பின்னர் மீனவர் பிரச்சினை குறித்து பேசப்படவில்லை. 9வருடங்களில் இரண்டு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தப் பாதிப்பை எவ்வாறு நிறுத்துவது என்று பேசப்பட்டது. அவர்களது கோரிக்கை இந்திய இழுமடி வலைகளை முற்றாக நிறுத்த வேண்டும். அதனை நிறுத்தினால் கடல்வளம் பாதுகாக்கப்படும் என்பதாகும்.
நாங்கள் இந்த இழுவலையை படிப்படியாக குறைப்பதற்கு இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் ஊடாக சம்மதிக்கின்றோம் எனக்கூறினோம்.
அடுத்த கட்டமாக ஏனைய மாவட்ட மீனவ அமைப்புக்களையும் ஒன்றுதிரட்டி இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் உதவியுடன் இப்பிரச்சினைக்கு பேச்சுக்களை முன்னெடுத்து நல்லதொரு தீர்வை அடுத்த கட்டமாக எட்ட முடியும்.
வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை அரசாங்கம் தமது சட்டத்தின்படி 6 மாதம், ஒரு வருடம், 2 வருடம் என்று சிறை வைத்துள்ளார்கள். அந்த மீனவர்களை மனிதபிமான முறையில் விடுவிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாகவும் தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளோம்.
அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையின் போது அதனை செய்யலாம் என்று இலங்கை மீனவர்கள் கூறியுள்ளார்கள். நிச்சயமாக இலங்கை, இந்திய அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இதற்கொரு தீர்வை எட்ட வேண்டும்.
இந்திய - இலங்கை கடற்பரப்பு மிகக் குறைவாக உள்ளது. அதிலும் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியதால் கடற்பரப்பு குறைவாக உள்ளது. அதனால் தான் எல்லை தாண்டும் பிரச்சினை ஏற்படுகிறது.
இதில் இந்திய - இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றோம். நிலமையை கருத்தில் கொண்டு இரண்டு அரசாங்கங்களும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
அரசியல் தலைவர்கள் தமது அரசியல் இலாபத்திற்காக சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அது பற்றி எமக்குத் தெரியாது. எங்களுடைய எண்ணம் கச்ச தீவை மீட்பதல்ல.
இரு நாட்டு மீனவர்களும் தொப்புள்கொடி உறவாக அப்பகுதியில் மீன் பிடிக்க வேண்டும். இரு பகுதி மீனவர்களும் பாதிக்காத வகையில் இரு நாட்டு அரசாங்கமும் நல்ல முடிவை எடுக்க வேண்டியது கட்டாயம். அவர்கள் எடுப்பார்களென நாங்கள் நம்புகின்றோம் எனத் தெரிவித்தார்.
அரச மட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவேண்டும் - அன்னராசா
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
2016ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்றுவரை நடைமுறைப்படுத்தாமையினால் தமிழ்நாட்டிலும் வடமாகணத்திலும் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே கடந்த 9 வருடங்களாக நடவடிக்கை மேற்கொள்ளாததையிட்டு இருநாட்டு மீனவர்களும் 9 வருடங்களுக்கு பின்பு இன்று கலந்துரையாடியுள்ளோம். இந்த கலந்துரையாடல் மூலம் நாம் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளோம்.
இருநாட்டிலும் பாதிக்கப்படுவது மீனவர்களே. எனவே இதனை தீர்க்கவேண்டிய அவசியத்தினையும் அதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும் இன்று கலந்துரையாடியுள்ளோம்.
இதன் அடுத்தகட்டமாக இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் அதிகாரிகளும் அதேபோன்று இந்தியபிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் இந்த பிரச்சனையை அரசமட்ட பேச்சுவார்த்தையாக கொண்டுசென்று அதனூடாக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவேண்டும் என்பதை இரு அரசாங்கங்களுக்கும் வலியுறுத்தி முன்வைக்கிறோம்.
அதேபோல தொடர்ச்சியாக இருநாட்டு மீனவர்களும் கலந்துரையாடுவதுடன். இருநாட்டு கடல்வளமும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் இருதரப்பும் இணங்கியிருக்கிறது.
அத்துடன் தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுடனும் கலந்துரையாடி இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆரம்பமுயற்சியாக இந்த பேச்சுவார்த்தை அமைந்துள்ளது.
எனவே இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கான தீர்வு அரசின் அனுசரணையோடு மிகவிரைவில் எட்டப்படும் எட்டுவோம் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது. இது மனிதாபிமானத்தோடு கையாளவேண்டிய விடயம். இந்த கலந்துரையாடல் தொடரும். என்றார்.
0 Comments