உடுப்பிட்டி மகளிர் கல்லூரி என்கிற தனி நிறுவனத்திற்காக தனது 33 ஆண்டுகால ஆசிரிய சேவையினை அர்ப்பணித்த புனிதவதி சண்முகலிங்கன் அவர்களுக்கு வழங்கப்பட்ட நல்ல பெண்மணி விருது வழங்கி கௌரவிப்பு
சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு 08.03.2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இந்த ஒன்றுகூடலில் கோகிலா மகேந்திரனின் "இணைகரத்தின் அயற்கோணங்கள்" சிறுகதை தொகுதி வெளியீடும், அனைத்துலக மகளிர் தினமும் "விழிசைச் சிவம்" நல்ல பெண்மணி விருது வழங்கல் நிகழ்வும், "வாழ்வின் தெரிவுகள்" பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், கி. மகேந்திரராஜா அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு நாள், சாதனைச் சிறுவர் பரிசு வழங்கல், "இணைகரத்தின் அயற்கோணங்கள்" சிறுகதை விமர்சன அரங்கும், ஒலிவடிவ சிறுகதா நிகழ்வும், "ஒரு சோகம் இறுகும் போது" சிறுகதா நிகழ்வு ஆகியன முக்கிய நிகழ்வுகளாக இடம்பெற்றன.
சர்வதேச பெண்கள் தினமான அன்று விழிசைச் சிவம் நல்ல பெண்மணிகளுக்கான விருதுகள் மூன்று பெண்மணிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
எழுத்தாளர் புனிதவதி சண்முகலிங்கன் அவர்களுக்கான விருதினை சிரேஷ்ட சட்டத்தரணி சோ. தேவராஜா மற்றும் தெல்லிப்பளை உதவிப் பிரதேச செயலர் நேசரத்தினம் செல்வகுமாரி ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
ஜீவநதியின் 284 ஆவது வெளியீடாக புனிதவதி சண்முகலிங்கத்தின் 10 நாட்டிய நாடகங்கள் அடங்கிய 'ஆனந்தக் கூத்து' நூல் கடந்தாண்டு 2024 இடம்பெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் மூன்று நூல்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டது.
அதில் சுயநாடகம் பிரிவில் ஆனந்தக் கூத்து நூல் தெரிவுசெய்யப்பட்டதற்கான சான்றிதழை கொழும்பில் இடம்பெற்ற சாகித்திய விருது வழங்கும் விழாவில் புனிதவதி சண்முகலிங்கம் அவர்கள் நேரடியாக பெற்றுக் கொண்டிருந்தார்.
சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் நிறுவனரும் இயக்குனருமான ஆசிரியரும், எழுத்தாளரும், உளவியலாளருமான கோகிலா மகேந்திரன் அவர்கள் கடந்த 38 ஆண்டுகளாக சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments